அமேசான் சர்வரை தகர்க்கும் சதி முறியடிப்பு: வெடிகுண்டு வாங்கச் சென்றவர் கைது

Amazon Server
Sasikala| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (14:50 IST)
அமேசான் நிறுவனத்தின் வெப்சர்வர்கள் (வலை வழங்கி) இயங்கும் தரவுகள் மையத்தை குண்டு வைத்துத் தகர்க்கச் சதி செய்ததாக 28 வயதான சேத் ஆரோன் பென்ட்லே என்பவரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு.

அமேசானின் இந்த தரவு மையத்தை தகர்ப்பதன் மூலம் 70 சதவிகித உலக இணைய செயல்பாட்டை முடக்கிவிடலாம் என அவர் கருதியதாகத்  தெரியவந்திருக்கிறது.
 
பென்ட்லே பிடிபட்டதற்கு பின்னால் ஒரு துப்பறியும் கதையே உள்ளது. தனது திட்டம் குறித்து பென்ட்லே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையடுத்து எஃப்.பி.ஐக்கு ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். வெடிகுண்டு வாங்குவதற்காக ரகசிய ஏஜென்ட் ஒருவரை அணுகியபோது அவரைப் பிடித்திருக்கிறது எஃப்.பி.ஐ.
 
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளை அவர் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
 
அமேசானின் வெப் சர்வர் வலையமைப்பு முழுவதையும் சேதப்படுத்த வேண்டும் என்பதுதான் பென்ட்லேயின் நோக்கம் என விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
வெப் சர்வீஸ் (வலை வழங்கி) தரவு மையம் தாக்கப்பட்டால் என்னவாகும்?
 
அமேசானின் வெப் சர்வர்களைக் கொண்ட தரவு மையம் 24 கட்டடங்களில் இயங்குகிறது. இங்கிருந்துதான் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ போன்ற அமைப்புகளின் சேவைகள்  உள்பட உலகத்தின் 70 சதவிகித இணைய செயல்பாடு நிகழ்கிறது என்று பென்ட்லே கருதுவதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
 
சரி, இதெல்லாம் எதற்கு என்ற கேள்வி எழலாம். அமெரிக்க அரசை மறைமுகமாக இயக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பெரும் பணக்காரர்களைக் கொண்ட  ரகசியமான அதிகாரக் குழுவை பாதிப்படையைச் செய்வதுதான் பென்ட்லேவின் நோக்கம் என்பது அவரது பதிவுகளில் மூலமாகத் தெரியவருகிறது.
 
தற்கால இணைய சேவையில் அமேசான் வெப் சர்வீசஸ் எனப்படும் தொழில்நுட்ப சேவை மிக முக்கியப் பங்காற்றுகிறது. முக்கியமான பல இணையதளங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.
 
இந்த தரவு மையம் பாதிக்கப்பட்டால் உலகின் பல முக்கியமான இணையதளங்கள் முடங்க நேரிடும். உதாரணத்துக்கு 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள  அமேசானின் ஒரு தரவு மையத்தில் கோளாறு ஏற்பட்டதால், முக்கிய இணையதளங்கள் பல மணி நேரத்துக்கு இயங்காமல் போயின. சில மாதங்களுக்கு முன்பு OVH என்ற மேகக் கணிமை (Cloud Computing) நிறுவனத்தின் தரவு மையம் முற்றிலுமாக எரிந்து போனதால், லட்சக்கணக்கான இணையதளங்கள்  முடங்கின.
 
பென்ட்லே கைது செய்யப்பட்டது குறித்து எஃப்பிஐ அமைப்புக்கு அமேசான் நிறுவனம் நன்றி தெரிவித்திருக்கிறது. தங்களது ஊழியர்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அமேசான் அறிவித்திருக்கிறது.
 
பிடிபட்டது எப்படி?
 
எஃப்பிஐ நடத்திய விசாரணையில் பென்ட்லே பற்றிய பல தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் அவர் பங்கேற்றிருக்கிறார். அதற்காக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டெக்ஸாஸ் மாநிலத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி.க்கு காரில் சென்றிருக்கிறார். தாக்குதலின்போது நாடாளுமன்றத்தின் ஜன்னல் வரை சென்றிருக்கிறார்.
 
அதற்கு இரண்டு நாளுக்குப் பிறகுதான் பென்ட்லேவின் இணையதளப் பதிவு குறித்து ஒருவர் எஃப்.பி.ஐக்கு புகார் அளித்திருக்கிறார்.
 
டயோனிசிஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பென்ட்லேவின் பதிவை எஃப்.பி.ஐ அமைப்பு ஆராயத் தொடங்கியபோது, அவரது உண்மையான மின்னஞ்சல் முகவரி கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டு ஃபேஸ்புக் பக்கத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் டயோனிசிஸ் என்ற பெயரில் இயங்குவது பென்ட்லே என்பது தெரியவந்திருக்கிறது.
 
சிக்னல் செயலி மூலமாக அமேசான் தரவு மையத்துக்கு குண்டு வைப்பது தொடர்பான தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டிருந்திருக்கிறார். உண்மையில் அவர்  தகவல்களை அனுப்பியது எஃப்.பி.ஐக்கு நம்பிக்கையான ஒரு நபர். ஒரு கட்டத்தில் வெடிபொருள்களை வாங்குவது என முடிவு செய்து, பென்லேவுக்கு ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் எஃப்.பி.ஐயில் பணியாற்றும் ரகசிய ஏஜென்ட். அவரிடம் அமேசான் தரவு மையத்தின் 3 கட்டடங்களைத் தகர்ப்பதற்கு  வெடிமருந்துகள் தேவை என்று பென்ட்லே கேட்டிருக்கிறார்.
 
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, வெடிபொருள் விநியோகிப்பவராக நடித்த ரகசிய ஏஜென்டை பென்ட்லே சந்தித்திருக்கிறார். அவரிடம் இருந்து வெடிபொருள்களை வாங்கிக் கொண்டு அவற்றைக் காரில் வைத்தபோது, ஏற்கெனவே காத்திருந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :