சுற்றுலாவுக்கு வர மறுத்த பெற்றோர்: பாலித் தீவுக்கு தனியாக பறந்த 12 வயது சிறுவன்

Last Modified வியாழன், 26 ஏப்ரல் 2018 (13:50 IST)
பெற்றோருடன் கோவித்து கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் இந்தோனீஷியாவில் உள்ள பாலிக்கு தனியாக பயணம் செய்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஆஸ்திரேலிய போலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இந்தோனீஷியாவிலுள்ள பாலித்தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்த சுற்றுலாவை பெற்றோர் ரத்து செய்த பின்னர், சிட்னியில் இருந்து கொண்டு, சிறுவன் விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்தான் என்று உள்ளூர் 'நயன்' தொலைக்காட்சி நிறுவனத்திடம் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.தனது பயணத்துக்கு பெற்றோரின் கிரேடிட் கார்டை அச்சிறுவன் பயன்படுத்தியுள்ளான்.
 
அவனுடைய பாஸ்போர்ட் மற்றும் பள்ளி அடையாள அட்டையை மட்டுமே சமர்ப்பித்துள்ள இந்த சிறுவன் பெர்த் வழியாக விமான பயணம் மேற்கொண்டுள்ளான்.மார்ச் 17ஆம் தேதி இந்த சிறுவன் பாலித் தீவில் இருந்தது தெரியவந்தது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
வீட்டை விட்டு வெளியேறிய ஒன்பது நாட்களுக்கு முன்னதாக அச்சிறுவன் காணாமல் போனதாகவும், காணமல் போன தினத்திலிருந்து அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் புகார் வந்ததாக ஆஸ்திரேலிய போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பாலித்தீவில் எத்தனை நாட்கள் அவன் இருந்தான் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

 
சிட்னியில் விமானத்தில் ஏறுவதற்கு சுய சேவை சோதனை முனையத்தை பயன்படுத்திய அந்த சிறுவன் விமானத்தில் பெர்த் சென்று அங்கிருந்த இணைப்பு விமானத்தில் பாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக 'நயன்' தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
 
இந்த சிறுவன் பெர்த்திலுள்ள விமான நிறுவன அதிகாரிகள் ஒரேயோரு முறை தன்னை விசாரித்ததாக கூறியுள்ளான்.
 
"நான் 12 வயதுக்கு மேற்பட்டவன், மேனிலை பள்ளியை சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க எனது மாணவர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்டை மட்டுமே அவர்கள் கேட்டனர்" என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்."நானொரு துணிகர செயலை செய்ய விரும்பியதால், இது மிகவும் நன்றாக இருந்தது" என்று கூறும் சிறுவன், தன்னுடைய சகோதரி வந்து சேர காத்திருப்பதாக கூறி பாலித்தீவிலுள்ள ஹோட்டல் அறையில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறான்.
 
மார்ச் 17ம் தேதி இந்த மாணவன் பாலித்தீவில் இருப்பது பற்றி எச்சரிக்கை அளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறியுள்ளது.சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முன்னர் பாதுகாப்புக்காக காவலில் எடுக்கப்பட்டான். அவன் வெளிநாடுக்கு சென்றுவிட்டான் என்று கண்டறிந்தபோது, அதிர்ச்சியடைந்து உணர்வற்று போய்விட்டதாக சிறுவனின் தாய் கூறியுள்ளார்.
 
இத்தகைய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த சம்பவம் நடைபெற்ற சூழ்நிலைகளை மீளாய்வு செய்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சர்வதேச பயணத்தை தடைசெய்கின்ற பயண எச்சரிக்கை இந்த மாணவர் மீது விதிக்கப்படவில்லை என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
வயதுக்கு வராத சிறுவர்கள் தனியாக விமானப்பயணம் மேற்கொள்வதற்கு எல்லா விமான பயண நிறுவனங்களும் தங்களுக்கே உரித்தான வழிமுறைகளை கொண்டுள்ளன. ஆனால், இது விமான பயண நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடுகின்றன என்று ஸ்வியின்பர்ன் பல்கலைக்கழத்தை சேர்ந்த விமானத்துறை நிபுணர் டாக்டர் கிரிஸ்டல் ட்சாங் கூறியுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :