திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (13:41 IST)

யேமென் நாட்டில் ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர், புதிய அமைச்சரவை தரையிறங்கியபோது சம்பவம்

செளதி அரேபியாவில் இருந்து பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் தரையிறங்கிய பிறகு, அங்குள்ள துறைமுக நகரான ஏடன் விமான நிலைய முனையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 22 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக் சயீத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பாதிப்பில்லாமல் தப்பித்து அதிபர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹுத்தி கிளர்ச்சியாளர்களின் "கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின்" விளைவாக இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் துறை அமைச்சர் மோமர் அல் எர்யானி கூறியிருக்கிறார்.

அதிபர் அப்த்ரபு மன்சூர் ஹாடிக்கும் பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கும் (எஸ்.டி.சி) விசுவாசமுள்ள சக்திகளுக்கு இடையிலான கடுமையான பிளவுகளை ஆற்றுப்படுத்தும் முயற்சியாக சயீத்தின் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

தலைநகர் சனா மற்றும் வடமேற்கு யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹுத்தி இயக்கத்திற்கு எதிரான உள்நாட்டுப் போரில் அவர்கள் கூட்டாளிகளாக இருந்திருக்க வேண்டியவர்கள்.

செளதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி ஹுத்திகளை தோற்கடிப்பதற்கும் அதிபர் ஹாடியின் ஆட்சியை மீட்டெடுப்பதற்கும் ஒரு ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, ​​2015இல் தீவிரமடைந்த மோதலால் யேமன் பேரழிவை சந்தித்தது.

இந்த சண்டையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது; உலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவை தூண்டிய அச்சம்பவம் காரணமாக, மில்லியன் கணக்கானோர் பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அங்கு காணப்படும் கோவிட்-19 தொற்று அந்த நாட்டின் நிலையை மேலும் மோசமாக்கி வருகிறது.

புதன்கிழமை சம்பவத்தின் காணொளி காட்சிகள் மூலம், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் ஏடனில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இறங்கிய வேளையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு ஏற்பட்டதை பார்க்க முடிகிறது.

அமைச்சர்களை வரவேற்க காத்திருந்த கூட்டம் இருந்த பகுதிக்கு அருகே புகைமேகம் படர்ந்தது. இதைத்தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூட்டின் சத்தம் விரைவில் கேட்கப்பட்டது.
சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் நஜீப் அல்-அவ்ஜைப், மொத்தம் இரண்டு குண்டுவெடிப்புகளையாவது கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவன நிருபர் கூறுகிறார்.

இந்த வெடிகுண்டு தாக்குதலின் காரணம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் மூன்று மோர்ட்டார் குண்டுகள் முனையத்தில் வீசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது.

செளதி தொலைக்காட்சியான அல்-ஹதத் ஒளிபரப்பிய காணொளியில், ஒரு ஏவுகணை போன்ற பொருள் கூட்டம் இருந்த பகுதியை நோக்கி வந்ததை பார்க்க முடிந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏடனில் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பு மீது ஹுத்திக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். அதை தற்போதைய சம்பவம் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.