கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (09:08 IST)

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நிர்மலா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினார்.

'உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களையும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களையும் எளிதாக தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய், சில நேரங்களில் நல்ல உடல் நலம் உள்ளவர்களையும் தாக்கும். கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு இப்போது இந்நோயின் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
இப்பூஞ்சை சுவாசிக்கும் காற்றிலும், வீட்டில் உள்ள அழுகிய காய்கறிகள், பழவகைகள், செடிகள் மற்றும் நாள்பட்ட ரொட்டி ஆகியவற்றிலும் பரவலாக காணப்படும்.

மூக்கடைப்பு, மூக்கிலிருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணை சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் கண் பார்வை குறைபாடு, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள்.
இக்கிருமி காற்றில் பரவி மூக்கின் வழியே உடலுக்குள் வருகிறது. வந்த பிறகு நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக இருந்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு குறையும் பொழுது இந்தக் கிருமி மூக்கில் உள்ள சதைகளின் உள்சென்று வளரும். பிறகு ரத்த நாளங்களிலும் சென்று பரவும்' என விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா.

கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்நோய் ஒரு மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோய், காச நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார் மருத்துவர் நிர்மலா.
'பூஞ்சை ஆரம்ப கட்டத்தில் மூக்கில் மட்டும் இருக்கும் போது மூக்கடைப்பு மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் கலந்த சளி வருதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்த நேரத்திலேயே இந்த நோயை நாம் கண்டறிந்தால் எளிதாக குணமாக்கி விடலாம்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உள்ளபோது அல்லது மீண்ட பிறகும் கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சர்க்கரை நோய், காச நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துணியாலான முககவசம் பயன்படுத்துபவர்கள் முகக்கவசம் ஈரம் ஆகிவிட்டால் அதை அணியக்கூடாது. தினமும் முக கவசத்தை துவைத்து காய வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரே முக கவசத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடாது' என்கிறார் இவர்.

ஜுன் 30 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாகவும், தற்போது வரை 3,200 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பகுதியினர் அதில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கண் பார்வை இழப்பை தவிர்க்க என்ன செய்வது?
கருப்பு பூஞ்சை சிகிச்சையை தாமதித்தால் கண்பார்வை இழப்பு மற்றும் உயிர் இழப்பு ஏற்படும் என்கிறார் மருத்துவர் நிர்மலா.
'இந்த நோய் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர்களை உடனடியாக பரிசோதனை செய்து, என்டோஸ்கோபி சோதனை செய்யப்படுகின்றது. உடனடியாக மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

பாதிப்புடன் வருவோருக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து மூக்கில் உள்ள அழுகிய சதைகளை எடுத்து திசு பரிசோதனைக்கு அனுப்புகிறோம். அதன் முடிவின் அடிப்படையில், எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
முகத்தில் உள்ள எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த எலும்புகளும் தேவைக்கேற்ப அகற்றப்படுகிறது. இதுவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110 நபர்களுக்கு சைனஸ் எண்டோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை குணப்படுத்தி உள்ளோம். சுமார் 30 நபர்கள் நோய் முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய கண் பார்வை பறிபோய் விட்டது.
ஆனால், அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்தி விட்டோம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம். தாமதித்தால் கண்பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும்.

இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி பூஞ்சை கொல்லி மருந்தையும் கொடுக்க வேண்டும். இந்த மருந்து நமது மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது.
பொதுமக்கள் யாரும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்' என வலியுறுத்துகிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர். நிர்மலா.

இந்திய அரசு என்ன சொல்கிறது?
ஜூன் 29 ஆம் தேதி, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், நாட்டில் மொத்தம் 40,845 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது எனவும், இதுவரை 3,129 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :