வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (14:28 IST)

காபூல் சீக்கியர் குருத்வாராவில் தாக்குதல்: "நாங்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை"

BBC
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சீக்கிய குருத்வாரா மற்றும் அந்த சமூக உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குச் செல்லும் வளாகத்தின் கோட்டைக் கதவுகளுக்கு வெளியே ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நபர்கள் அங்கிருந்த பாதுகாவலரைக் கொன்றுள்ளனர்.

உள்ளே வரும்போது அவர்கள் கையெறி குண்டுகளுடன் நுழைந்தனர், அதே நேரத்தில் அருகே உள்ள சோதனைச் சாவடிகளில் இருந்த தாலிபன் உறுப்பினர்கள் ஆயுததாரிகளைப் பின்தொடர்ந்து விரைந்தனர்.

"என் வீடு குருத்வாராவிற்கு முன்னால் உள்ளது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ஆயுததாரிகள் உள்ளே இருப்பதாக மக்கள் கூறினார்கள்," என்று குல்ஜித் சிங் கல்சா பிபிசியிடம் கூறினார்.

"சம்பவ பகுதியில் கூச்சல், குழப்பம் காணப்பட்டது. திடீரென்று வெளியே குண்டு வெடித்தது," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே தாலிபன் சோதனைச் சாவடி உள்ளது. அதை அடுத்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காருக்குள் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாலிபன் சோதனைச் சாவடி பிரிவின் தளபதி கொல்லப்பட்டார். தாக்குதலில் சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளும் சேதம் அடைந்தன.

அன்றாட காலை பிரார்த்தனை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாத தாக்குதல் நடந்துள்ளது.

"இந்த தாக்குதல் அரை மணி நேரம் தாமதமாக நடந்திருந்தால், உள்ளே இன்னும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கும்," என்று குல்ஜித் சிங் கல்சா கூறினார்.

சீக்கியர்கள், இந்துக்கள் வாழ்ந்த நாடு

ஆப்கானிஸ்தான், ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் தாயகம் போல இருந்தது, ஆனால் பல பத்தாண்டு கால மோதல்களின் காரணமாக அந்தச் சமூகங்களின் எண்ணிக்கை மிகச் சிறிய எண்ணிக்கையாகக் குறைந்து விட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், அந்நாட்டில் எஞ்சியிருக்கும் சிறுபான்மை சமூகத்தினரை இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் உள்ளூர் கிளையைச் சேர்ந்தவர்கள் திருப்பித் திருப்பி இலக்கு வைக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டில், ஆப்கனின் கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் ஒரு கூட்டத்தை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்கினார், மற்றொரு குருத்வாரா 2020இல் தாக்கப்பட்டது.

"ஜலாலாபாத்தில் தாக்குதல் நடந்தபோது, ​​சுமார் 1,500 சீக்கியர்கள் இருந்தனர், அதன் பிறகு, 'நாங்கள் இனி இங்கு வாழ முடியாது' என்று மக்கள் நினைத்தார்கள்," என்கிறார் சுக்பீர் சிங் கல்சா.

2020 ஆம் ஆண்டு தாக்குதலுக்குப் பிறகு ஆப்கனில் இருந்து மேலதிகமானோர் சென்றனர். கடந்த ஆண்டு ஆளுகைப் பொறுப்பை தாலிபன் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது, எஞ்சிய சீக்கியர்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவாகச் சுருங்கியது. இப்போது அது 150 ஆகி விட்டது.

"இங்கிருந்த அனைத்து வரலாற்றுபூர்வ குருத்வாராக்களும் ஏற்கெனவே அழிந்துவிட்டன. எஞ்சியது இப்போது தாக்குதல் நடத்தப்பட்ட தலம் மட்டும்தான்," என்கிறார் கல்சா.

நடந்த தாக்குதலுக்கு இதுவரை, எந்த ஆயுததாரிகள் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்த சமீபத்திய தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் குழு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மட்டுமின்றி ஷியா மற்றும் சூஃபி முஸ்லிம் சிறுபான்மையினரும் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை விட ஐஎஸ் குழுவினர் மிகவும் குறைவான சக்தி வாய்ந்தவர்கள். அந்தக் குழு எந்த பிரதேசத்தையும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதல்கள் சிலவற்றுக்குப் பொறுப்பாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்து அவர்கள் அதிகாரத்திற்குத் திரும்பியது முதல் அங்கு வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை, வியக்கும் வகையில் குறைந்துள்ளன - அவர்களின் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது - ஆனால் தேசத்திற்கு இறுதியாக பாதுகாப்பைக் கொண்டு வந்ததாக தாலிபன் கொடுத்த வாக்குறுதியை ஐஎஸ் செயல்பாடுகள் மட்டுப்படுத்தி வருகின்றன.

காபூல் போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் பிபிசியிடம் பேசும்போது, "பொதுமக்களைக் குறி வைப்பது தாக்குதல் நடத்தியவர்களின் "கோழைத்தனமான" தன்மையைக் காட்டுகிறது," என்று கூறினார்.

"எங்கள் தோழர்கள் சீக்கிய சமூகத்திற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர், இஸ்லாமிய நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டியது அவர்களின் உரிமை" என்று காலித் சத்ரான் தெரிவித்தார்.

வழிபாட்டுத்தல வளாகத்தில் தாக்குதல் தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து ஆயுததாரிகளும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. குறைந்தபட்சமாக ஒரு சீக்கியரும் தாலிபன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.

குருத்வாரா பகுதியில் தீக்கிரையான இடிபாடுகளில் இருந்து இப்போதும் புகை வந்து கொண்டிருக்கும் பகுதியில் உயிர் தப்பிய சீக்கிய சமூகத்தினர் திரிகின்றனர். தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர தாலிபன்கள் செய்த உதவிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகக் கூறும் அவர்கள், "ஆனால் இந்த நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.

"எங்களுக்கு விசா வழங்குவதற்கான வழியைக் கண்டறியமாறு இந்திய அரசாங்கத்திடம் பல முறை முறையிட்டுள்ளோம். நாங்கள் இனியும் இங்கு வாழ விரும்பவில்லை" என்கிறார் சுக்பீர் சிங் கல்சா.

"இங்கே எஞ்சியிருப்பவர்கள் விசா கிடைக்காத ஒரே காரணத்தால்தான் இங்கேயே தங்கியிருக்கிறார்கள். யாரும் இங்கே விருப்பத்துடன் தங்கியிருக்கவில்லை. இப்போது தாக்குதல் நடந்துள்ளது. இது நாளையும் நடக்கும். திரும்பத் திரும்ப நடக்கும். இது தொடரும்," என்கிறார் அவர்.