வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2014 (13:30 IST)

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்தது சட்ட விரோதமானது ஐ.நா. தீர்மானம்

கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைத்தது சட்டவிரோதமானது என்று ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துவந்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து,  கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாகவும், தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தும் கிரிமிய மக்ககளில் 97 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இவ்வாறு கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு செல்லாது என்றும், கிரிமியாவில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நா.பொது சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் 100 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்தன. 
 
கடந்த 16 ஆம் தேதி ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என்று ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன.  இருப்பினும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது 
 
ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க முடியாது என்று அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறினார். எனினும் கிரீமிய மக்கள் ரஷ்யாவுடன் இணைந்து வாழவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.