”தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்” - கோத்தபய ராஜபக்சே


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (20:32 IST)
இலங்கையில் மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்றும் தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே கூறியுள்ளார்.
 
 
கொழும்பில் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, “இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. அரசியல் சுயநல வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி விட்டனர்.
 
நாம் புலிகள் இயக்கத்தை அழித்த போதிலும் புலிகளினால் ஊட்டச்சத்து வழங்கப்பட்ட அரசியல் புலிகளை நாம் அழிக்கவில்லை. அதன் விளைவு இன்று ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாடு மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளது.
 
எமது கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இன்று நாம் இல்லாத நிலையில் மீண்டும் நாட்டில் கிளர்ச்சிகள் உருவாக ஆரம்பித்துள்ளன.
 
அனைத்துலக புலிகள் அமைப்புகளை இலங்கை விசயங்களில் தலையிடவிடாது தடுத்திருந்தோம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.
 
எமது கட்டுப்பாட்டில் எவ்வாறு நாடு இருந்ததோ அதே நிலைமை மீண்டும் உருவாக வேண்டும். வடக்கை எமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும். போரின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர்” என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :