சூரியன் ஒரு சதுர மீட்டர் 71 ரூபாய்: இணையத்தில் கூவிக்கூவி விற்கும் ஸ்பெயின் பெண்

sun for sale maria
Ilavarasan| Last Modified திங்கள், 8 ஜூன் 2015 (18:49 IST)
சூரியனுக்கு உரிமைகோரி வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர்,
தமக்கு சொந்தமான சூரிய பகுதியை பயன்படுத்திய வகையில் தனக்கு 7,500 பவுண்டுகள் கட்டண பாக்கி வரவேண்டியது உள்ளதாக கூறி நீதிமன்றம் சென்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 54 வயதான மரியா டுரன் என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார். பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில்,
அலுவலகம் ஒன்றையும் திறந்து அமர்க்களமாக பிஸ்னஸை தொடங்கினார்.

குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்தார்.

மேலும் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம் வழியாக சூரியனின் பகுதியை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 71.30) என்று கட்டணம் நிர்ணயித்து விளம்பரம் வெளியிட்டார். இதனை நம்பிய சிலர் அந்தப் பெண்ணின் கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர்
இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களையடுத்து இ-பே நிறுவனம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மரியா டுரன் கணக்கைத் தடை செய்தது. இதனையடுத்து மரியா,
ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சோலார் பேனல் மூலம் தமக்கு சொந்தமான சூரியனின் பகுதியை பயன்படுத்திய வகையில் தமக்கு 7,500 பவுண்டுகள் கட்டண பாக்கி வரவேண்டியது உள்ளதாகவும், ஆனால் இதுவரை தனக்கு அந்த கட்டணம் வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார். அவரின் வழக்கை நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம் என இ-பே நிறுவனம் முன்வந்ததையும் மரியா நிராகரித்துவிட்டார். மேலும் தனது இணைய தளம் மூலமாக சூரியனை பிளாட் போட்டு விற்பதையும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நட்சத்திரத்தையோ அல்லது வேறு எந்த ஒரு கிரகத்தையோ எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாடக்கூடாது என சர்வதேச ஒப்பந்தம் உள்ளதாகவும், ஆனால் தாம் தனிநபர் என்பதால் தம்மை அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றும் மரியா மேலும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :