”சகோதரர்கள் சண்டையை நிறுத்தங்கள்” - மகன்களை இழந்தவர்கள் கோரிக்கை


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (15:31 IST)
எதிரெதிர் நின்று சண்டை போட்ட இரண்டு பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் புதைத்ததோடு, சண்டையை நிறுத்துங்கள் என்று இருவரின் தந்தையர் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 
குர்தீஷ் இன மக்கள் மீது துருக்கிப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. துருக்கியில் குர்தீஷ் இன மக்களுக்கான சுயாட்சிப் பகுதி கோரி போராட்டம் நடந்து வருகிறது. அந்தக் கோரிக்கையை குர்தீஷ்தான் தொழிலாளர் கட்சி முன்னெடுத்துள்ளது.
 
இந்தப் போராட்டத்தை ஒடுக்க, சுயாட்சி கோருபவர்களை பிரிவினைவாதிகள் என்று கூறி ராணுவத் தாக்குதலை துருக்கி நடத்தி வருகிறது. இந்த சண்டையில் இளைஞரான ’ரித்வான்’ என்பவர் துருக்கி ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அதே சமயம் ’ரிசெப்’ என்ற துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த இளைஞரும் பலியானார்.
 
இருவரும் உறவினர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். எதிரெதிர் அணியில் நின்று சண்டை போட்டிருக்கிறார்கள். இந்த இருவரின் தந்தையரும், இருவரது உடல்களை ஒரேயிடத்தில், 50 அடி இடைவெளியில் புதைத்துள்ளனர்.
 
ஒரே சமயத்தில் இரங்கல்களைப் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்து, அருகருகே நின்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
 
அப்போது அவர்கள் பேசுகையில், ”இருவரும் ஒன்றாகவே குழந்தைப் பருவத்தினைக் கழித்தவர்கள். நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். இது போன்று மண்ணுக்குள் சகோதரர்கள் போவதை விரும்பவில்லை. யாருடைய இதயமும் எரிவதை விரும்பவில்லை. எங்கள் வாழ்க்கையே எரிந்துவிட்டது.
 
இதுபோன்ற வேறு யாருடைய வாழ்க்கையும் எரிந்துவிடக்கூடாது. இது போன்ற மோதல்கள் கடந்த காலத்திலும் எழுந்தன. அதனால் யாருக்குமே பலன் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டனர்.
 
இதைச் சொல்லி முடிக்கும்போது இருவருமே கதறி அழுதனர். இருவரின் தாய்களும் உடன் பிறந்தவர்கள். இரண்டு பேருடைய குடும்பங்களும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் பெரும் துயரத்தில் உள்ளனர்.
 
ரித்வானின் தந்தை ராமிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எங்கள் மகன்களே போரில் கொல்லப்படும் கடைசி இளைஞர்களாக இருக்கட்டும். இருவரின் தாய்கள் அழுவது எங்கள் இதயத்தைச் சுட்டெரிக்கிறது.
 
எங்கோ தெருவிலிருந்து அக்குழந்தைகளைக் கண்டெக்கவில்லை. குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து வரவில்லை. அவர்களைச் சுமந்து பெற்றெடுத்து, 25 ஆண்டுகாலம் வளர்த்தவர்கள்” என்று குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :