வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 26 டிசம்பர் 2015 (07:33 IST)

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.


 

 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 
 
இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜெனரல் குலாம் ரசூல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் 196 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
 
லாகூர், செய்குபுரா, நன்கனா எஸ்சாகிப், பைசலாபாத், சர்கோதா, செய்குபுரா முல்தான், சக்வால். லோத்ரன்,சியல்கோட், முரீ, பெஷாவர், மலாகண்ட், சர்சடா, மன்சக்ரா, ஸ்வாட், மற்றும் தெற்கு வஜீரிஸ்தான் என்று பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது." என்றார்.
 
இந்த நில நடுக்கம் ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.