1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 25 டிசம்பர் 2014 (14:28 IST)

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்க 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை

தீவிரவாதிகளின் ஒழிக்கும் பணியில் 5 ஆயிரம் பேர் கொண்ட தீவிரவாத தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த 16ஆம் தேதி புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.
 
இதைத் தொடர்ந்து, தலிபான்களை ஒடுக்க அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரிப் கடந்த 17ஆம் தேதி கூட்டினார்.
 
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் கான் மற்றும் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 
 
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறுகையில், “கடைசி தீவிரவாதியை தீர்த்துக் கட்டும் வரை தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் ‘ஸர்ப்-இ-அஸப்’ தாக்குதல் தொடரும்.
 
இந்த தாக்குதலை மேலும் தீவிரமாக்குவது தொடர்பாக பரிந்துரைக்க உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இடம் பெறும் தேசிய செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் குழு இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடத்தப்படும் தலிபான்களுக்கு எதிரான உச்சக்கட்ட தாக்குதலில் நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று பாகுபாடு பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்“ என்று அவர் தெரிவித்தார்.
 
அவர் இவ்வாறு சுறி  ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில், அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார், “தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கைபர்-பக்துங்க்வா, பஞ்சாப், சிந்து பலூசிஸ்தான் மாகாணங்களில் 5 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு அதிநவீன பயிற்சி அளித்து, தீவிரவாத தடுப்பு சிறப்புப் படை ஒன்று உருவாக்கப்படும்“ என்று அறிவித்துள்ளார்.
 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறுகையில், “அசாதாரண சூழ்நிலையை நாடு தற்போது எதிர் கொண்டு வருவதால், அசாதாரண நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டியுள்ளது.
 
தீவிரவாதத்தை நாட்டை விட்டு ஒழிக்கும் அரசின் முயற்சியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தீவிரவாதிகளின் தொல்லையை நாட்டைவிட்டு விரட்டாவிட்டால் வருங்கால வரலாறும் இந்த நாடும் நம்மை மன்னிக்காது. 
 
தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இவ்விவகாரத்தில் உங்களுக்கு ஏதாவது தனிக்கருத்து இருந்தால் அதுபற்றி அரசுக்கு தெரிவித்தால் உரிய முறையில் விவாதித்து முடிவெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்“ என்று தெரிவித்துள்ளார்.