6 மாதங்களுக்கு முன் 21,000 பேர் வேலை காலி.. இப்போது மீண்டும் ஒரு வேலைநீக்கமா? ஆரக்கிள் அதிரடி முடிவு?
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் மீண்டும் ஆட்குறைப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அதாவது செப்டம்பர் 1, 2026-க்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை முடிக்க மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. சில பிரிவுகளில் கடுமையான அளவில் பணிநீக்கங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரக்கிள் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 13 சதவீதத்தினரான 21,000 பேரை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்காக நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
2026 ஆம் நிதியாண்டில் மட்டும் AI உள்கட்டமைப்பிற்காக 55.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆரக்கிள் செலவிட்டுள்ளது. இதற்காக பெருமளவில் கடன் வாங்கியுள்ள போதிலும், கிளவுட் வணிகம் தொடர்ந்து லாபகரமாகவே இயங்கி வருகிறது.
மறுசீரமைப்பு மற்றும் பணியாளர் பிரிவினை செலவுகளுக்காக கடந்த நிதியாண்டில் நிறுவனம் 1.84 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. எனினும், இந்த புதிய பணிநீக்க திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆரக்கிள் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
Edited by Siva
