வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (16:53 IST)

11 ஆண்டுகளில் முதன்முறையாக எண்ணெய் விலை வீழ்ச்சி

எண்ணெய் விலைகள் சர்வதேச சந்தையில் 11 ஆண்டுகளில் முதல் முறையாக பீப்பாய்க்கு 35 டாலர்கள் என்ற அளவுக்குக் கீழ் வீழ்ந்துள்ளன.


 

கடந்த சனிக்கிழமை பிரபலமான ஷியாப் பிரிவு முஸ்லிம் மதகுரு ஷேக் நிம்ர் அல்-நிம்ர் (47) உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என ஷேக் நிம்ரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைபவேற்றியதை அடுத்து, தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்துக்குள் நுழைந்த ஈரானிய போராட்டக்காரர்கள் அதிரடியாக தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்தனர்.

இதனால், ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்படுவதாக சவுதி அரேபியா தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்த ஈராக் உள்ளிட்ட நாடுகள் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
 
ஈரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே வெடித்துள்ள சர்ச்சை காரணமாக எண்ணெய் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், வீழ்ந்து வரும் எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில், பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான 'ஓபெக்'கின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உடன்படுவார்கள் என்ற யூகங்களுக்கு மாறாக, இந்த சர்ச்சை எண்ணெய் விலையை மேலும் குறைத்துள்ளது.

அதிக உற்பத்தி காரணமாக பாதிப்படைந்த ஃப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 2014ம் ஆண்டின் மத்தியில் நிலவிய அளவைக்காட்டிலும், மூன்றில் ஒரு பங்குக்கும் கீழாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பெரும் பதற்ற நிலையையும் மீறி விலை வீழ்ச்சி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.