வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மே 2015 (15:34 IST)

மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி தன் பயணத்தை முடித்தது

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.


 
இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர்.
 
ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர்.
 
மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இறுதியாக மணிக்கு 8,750 மைல்.
 
வேகத்தில் அது புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும்.
 
இந்தக் கலன் 513 கிலோ எடையும், சுமார் மூன்று மீட்டர் நீளமும் கொண்டது. இது மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஆனால் இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.
 
இந்த அளவுக்கு வேகமாக இந்தக் கலன் விழக்காரணம் புதனில் , பூமியில் இருப்பது போல மேல் பரப்பில் சூழல் இல்லாதுதான் ; பூமியின் மேற்சூழல் விண்ணிலிருந்து பூமிக்குள் வரும் எந்தப் பொருளையும், அங்கேயே எரித்துவிடுகிறது.
 
அத்தகைய சூழ்நிலை புதன் கிரகத்தில் இல்லாததால்,இந்தக் கலன் வேகமாக பாய்ந்து நொறுங்கியது. இது போல விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் புதனின் மேற்பரப்பில் மோதுவதால்தான், புதன் கிரகத்தில் பல பள்ளங்கள் காணப்படுகின்றன.