வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 ஜூன் 2015 (15:37 IST)

தென் கொரியாவில் வேகமாகப் பரவும் மெர்ஸ் நோய்: 6 பேர் பலி

தென் கொரியாவில் மெர்ஸ் நோய் வேகமாகப் பரவிவருகிறது, அங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
 
சவுதி அரேபியா நாட்டில் சுற்றுலா சென்று வந்த தென் கொரியாவுக்கு திரும்பிய 60 வயது நபரை மெர்ஸ் நோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவர் மூலமாக இந்நோய் பரவியதில் அந்நாட்டில் நேற்று வரை 5 பேர் பலியாகியிருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியானதால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
 
மெர்ஸ் நோயால் நேரிடையாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக இருந்த நிலையில், இன்று அது 87 ஆக அதிகரித்துள்ளது.
 
அந்நாட்டு தலைநகர் சியோலில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டேஜியோன் பகுதியில் இந்நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.
 
இது தவிர 2300 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அந்நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சியோல் மற்றும் ஜியோங்கி மாகாணங்களில் உள்ள 1900 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
 
இந்நோயால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்ட 23 பேரில் 17 பேர் தெற்கு சியோலில் உள்ள சாம்சுங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.