’பிரபாகரன் சுட்டு தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்’ - கருணா பரபரப்பான தகவல்

Ashok| Last Updated: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (12:56 IST)
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன்  தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாகவும் பின்னர் ராணுவ தளபதியாகவும் இருந்த கருணாகரன், போரின் இறுதியில், ராஜபக்சேவுடன் கைகோர்த்தார். பின்னர் விடுதலைப் புலிகளை காட்டி கொடுத்ததாக, கருணாகரனை ஈழத்தமிழர்கள் கூறி வருகின்றனர்.
 
மகிந்த ராஜபக்சே பிரதமராக இருக்கும்பொழுது அவருக்கு துணை அமைச்சர் பதவி கிடைத்தது. மேலும், இலங்கை சுதந்திர கட்சியின் துணைத் தலைவர் பதவியும் அவருக்கு கொடுக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவை சுதந்திர கட்சி போட்டியிட அனுமதிக்கவில்லை. நியமன எம்.பி.யாகவும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கருணாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த போது போரின் இறுதியில் நடைபெற்ற தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
அப்போது கூறிய அவர், “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவக் கட்டமைப்புக்கான பொறுப்பாளராக இருந்தேன். நார்வேயில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது கூட்டாட்சி முறையை நான் வலியுறுத்தினே.
 
ஆனால் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் இதில் தயக்கம் காட்டினார். இருப்பினும் அதில் கையெழுத்திட்டோம். இலங்கைக்கு நாங்கள் திரும்பியபோது எங்கள் மீது பிரபாகரன் கோபம் கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் தனிநாடு என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தது.
 
இதனால்தான் நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது. அதே நேரத்தில் புலிகளுடன் சகோதர யுத்தம் நடத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் என்னுடன் வந்த போராளிகளை வீட்டுக்குப் போக கூறிவிட்டேன்” என்றார்.
 
மேலும், இறுதிப் போரில் இலங்கையை போரை நிறுத்துமாறு இந்தியாவுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசியில்வாதிகள் தரவில்லை என்றும் இறுதிப் போரில் உலக தமழர்கள் இலங்கைக்கு உரிய அழுத்தம் தந்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார்
 
இறுதிப் போரில் அமைதிக்காக வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள் சுட்டுக் கொன்றது தவறு. இதற்கு இலங்கை ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என கருணாகரன் தெரிவித்துள்ளார்.
 
அந்தப் போரில் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி உயிரிழந்துவிட்டார். மேலும் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்டதாக இலங்கை ராணுவம் உறுதியான தகவலை ராணுவம் வெளியிட்டது.
 
இதனைத் தொடர்ந்து இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைது செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அப்பொழுது வலது கை பழக்கம் உள்ள பிரபாகரன் இடப்பக்கத்தில் இருந்த கைத் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில்  சுட்டிருந்ததால்தான் அவரது தலை பிளவுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
 
தனக்கு மட்டும் தெரிந்த அடையாளத்தை இலங்கை ராணுவத்திடம் தெரிவித்து பிரபாரனின் சடலத்தை உறுதி செய்தேன் என்றும் கருணாகரன் தெரிவித்தார். நிச்சயமாக இலங்கை ராணுவத்திடம் உயிரோடு பிடிபடும் சூழ்வதை பிரபாகரன் விரும்பமாட்டார் எனவும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :