வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (17:59 IST)

எங்கள் மகன் விரைவில் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்: ஐ.எஸ். தீவிரவாதியின் பெற்றோர்

ஐ.எஸ். தீவிரவாதி முகமது எம்வாசியின் பெற்றோர் "நாங்கள் அவனை வெறுக்கிறோம். அவன் நரகத்திற்குதான் செல்வான். அவன் சீக்கிரம் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர்.
பலரது தலையை துண்டித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி முகமது எம்வாசியின் குழந்தை பருவ புகைப்படமும், அதைத் தொடர்ந்து அவனது கல்லூரி காலப் புகைப்படமும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதன் முறையாக அவனது உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இதனால் பெரும் அதிர்ச்சிக்கும், அவமானத்திற்கும் ஆளான முகமது எம்வாசியின் பெற்றோர் "நாங்கள் அவனை வெறுக்கிறோம். அவன் விரைவில் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
 
26 வயதான முகமது எம்வாசி கடந்த 2013ஆம் ஆண்டு, "நான் சிரியாவிற்கு செல்லப்போகிறேன். நான் செய்த எல்லா தவறுக்காகவும் என்னை மன்னியுங்கள்" என்று தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளான். அதற்கு அவனது அப்பா "நீ சிரியாவிற்கு போவதற்கு முன் செத்து விடுவாய் என்று நம்புகிறேன்" என்று சொல்லிவிட்டு கோபமாக இணைப்பை துண்டித்துள்ளார்.
 
மேலும் "அவன் ஒரு நாய், மிருகம், பலரது உயிரைக்கொன்ற தீவிரவாதி. நான் அவனிடம் நிறைய முறை இந்த தவறான வழியை விட்டு விட்டு, பழைய வாழ்க்கைக்கு திரும்புமாறு கெஞ்சி கேட்டுக்கொண்டேன். ஆனால் என் பேச்சை அவன் கேட்கவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள முகமது எம்வாசியின் குடும்பத்தினர் "நாங்கள் அவனை வெறுக்கிறோம். அவன் நரகத்திற்குதான் செல்வான். அவன் சீக்கிரம் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.