'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை தடை செய்தது தவறு


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified சனி, 4 ஏப்ரல் 2015 (15:43 IST)
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிபிசி வெளியிட்ட ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை இந்தியா தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ போலிங்கர் தெரிவித்தார்.
 
 
இதுகுறித்து இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த போலிங்கர், “இந்திய அரசு பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்தது தவறு என்றே நான் கருதுகிறேன். ’உலக மனித உரிமைகள் தீர்மானம் பிரிவு 19’ இதுபற்றி தெளிவாக வரையறை செய்துள்ளது. பேச்சுரிமை மற்றும் இத்தகைய கருத்துகளைக் கொண்ட படங்களை தடை செய்யக்கூடாது; மாறாக அவை பாதுகாப்புக்கு உரியது” என்றார்.
 
மேலும், பேச்சுரிமை அல்லது கருத்துச் சுதந்திரம் நம் சமூகத்தை மோசமாகச் சித்தரித்து விடும் என்று எந்த அரசும் கூறுவதற்கு அனுமதி கிடையாது. இத்தகைய வெளிப்பாடுகள் அபாயகரமானவை என்றும், இதனால் மக்கள் உணர்வுகள் காயமடையும் என்றும் அரசுகள் கூறுவது போதாமையை உணர்த்துவதாக உள்ளது.
 
பொது விவகாரங்களை மக்கள் விவாதிக்க வேண்டும். நல்லது எது, கெட்டது எது என்பதை மக்கள் தேர்ந்தெடுத்து அதனடிப்படையில் சமூகத்தின் எதிர்வினை என்ன என்பது பற்றியும் மக்கள் ஒரு சுயமான முடிவுக்கு வர முடியும். ஆனால் அரசு கூறும் காரணங்கள் இவற்றைச் செய்ய விடாமல் தடுக்கும் உத்தியே தவிர வேறில்லை.
 
இதில் ஒரு விஷயம் என்னவெனில் பேச்சுரிமையை தடை செய்வது மிகவும் ஆபத்தானது. ஆபாசம், அவதூறு, வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு ஆகியவை தடை செய்யப்படலாம். ஆனால் பொது பிரச்சனை குறித்த சொல்லாடல்கள் வேறு வகையைச் சார்ந்தவை. நாம் ஜனநாயகத்துக்கு கடமை மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதன் பொருள் இதுவே.” என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :