டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. கச்சா எண்ணெய் ஒரே நாளில் உச்சம்..!
ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்கு பிறகு, முதன்முறையாக ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான், தப்ரீஸ் உள்ளிட்ட முக்கிய ஈரானிய நகரங்களில் ராணுவ இலக்குகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசியுள்ளது.
முன்னதாக, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. அதன் தொடர்ச்சியாகவே இஸ்ரேல் இந்த அதிரடி பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் போரை தவிர்க்குமாறு தொலைபேசியில் அறிவுறுத்தியதையும் மீறி இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. லெபனான் விவகாரமே இந்த மோதலின் மையப்புள்ளியாக உள்ளது.
இந்தத் திடீர் போர் பதற்றம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 3% வரை உயர்ந்து, ஒரு பேரல் 96 டாலரை கடந்துள்ளது. மேலும், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையிலும் இது பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் பேச்சுவார்த்தை உடன்படிக்கை எட்டப்படும் என நம்பினாலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
