1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (11:04 IST)

ஈரான் மீது குண்டுமழை! இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன்! - ஈரான் தளபதி ஹுசைன் சலாமி கொலை!

Operation Rising Lion

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஈரான் தளபதி ஹுசைன் சலாமி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் உள்ளிட்ட நாடுகள் உதவி வந்தன. இதனால் சமீபமாக ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அதேசமயம் ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, ஈரான் ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும் என எச்சரித்து வந்தது.

 

இதற்கிடையே இஸ்ரேல், ஈரானில் உள்ள அணு ஆயுத பகுதிகளை தாக்கக் கூடும் என்பதால், அமெரிக்கா இஸ்ரேலை அமைதியாக இருக்குமாறு கட்டுப்படுத்தி வந்ததுடன், ஈரானிடம் அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்தது, ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவையும் எட்டவில்லை

 

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்கியது. இந்த சம்பவத்தில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி ஹுசைன் சலாமி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீதான ஆபரேஷன் ரைசிங் லயனை அறிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.

 

இதுகுறித்து பேசிய அவர் “இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது இஸ்ரேல் மீதான ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை. இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஆபரேஷன் ரைசிங் லயன் நீடிக்கும்” என்று பேசியுள்ளார்.

 

ஈரான் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த முயலும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையேயான இந்த மோதல் பெரிய போராக வெடிக்கும் சூழல் உள்ளதால் மத்திய கிழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K