36வது முறையாக டிரம்பின் அமைதி ஒப்பந்த முயற்சி.. அதை 36வது முறையாக சீர்குலைத்த இஸ்ரேல்...
ஈரான் உடனான வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா மிக நெருக்கமாக இருக்கும் வேளையில், இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
"பெய்ரூட் மீதான இன்றைய காலைத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. குறிப்பாக, ஈரானுடன் ஒரு முக்கிய அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திட நாம் மிக நெருக்கமாக இருக்கும் இந்த சுபநாளில் இது முற்றிலும் தேவையற்றது" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தனக்கான தற்காப்பு உரிமையை கொண்டிருந்தாலும், அதற்கு முன்பாக நடந்த தாக்குதல் மிகவும் சிறியது மற்றும் எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படாத ஒன்று என்பதால், இந்த முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தையை அது சீர்குலைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் உட்பட ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியைக் கொண்டுவரும் இந்த ஒப்பந்தத்தை யாரும் கெடுத்துவிடக் கூடாது என்றும், ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பும் தங்களது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒப்பந்தம் தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவிப்பதும், இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அது முறிவடைவதும் இது 36-ஆவது முறை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Edited by Siva
