இப்படியா ஒரு செய்திக்கு டைட்டில் போடுவது.. நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உள்பட்ட மிர்பூர் பகுதியில், தாறுமாறான விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகத்தின் முறையற்ற செயல்களுக்கு எதிராக 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' முன்னெடுத்துள்ள போராட்டங்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
ரவாலகோட்டில் தொடங்கி முசாஃபராபாத் வரை மக்கள் நடத்திய மாபெரும் பேரணியை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தானின் ராணுவப் படைகள் நடத்திய வெறித்தனமான அடக்குமுறையால் அங்குப் பெரும் ரத்தக்களறி ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் முப்பது பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, முப்பத்து மூன்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்தச் சம்பவத்தைக் குறித்தும் 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் பத்திரிகை அப்பகுதியைப் 'பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர்' என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டதற்கு இந்தியத் தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
எக்ஸ் தளத்தில் இதற்கு முறையான பதிலடி கொடுத்துள்ள இந்தியத் தூதரகம், "'பாகிஸ்தானிய காஷ்மீர்' என்றொரு பிராந்தியமே கிடையாது; அங்கே இருப்பது சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமே. ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கங்கள்; பாகிஸ்தான் அவற்றை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது" என்று அடித்துச் சொல்லியுள்ளது. மேலும், இந்தப் படுகொலைகள் குறித்துத் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அழுத்தம் கொடுத்துள்ளது.
Edited by Siva
