1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:26 IST)

யாழ்ப்பாணத்தில் தோண்டிய இடங்களிலெல்லாம் மனித எலும்புகள்: இலங்கை எம்.பி.க்கள் பார்வையிட்டனர்

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு அருகில் மின்மாற்றி ஒன்றை நிறுவுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதனையடுத்து அருகில் வேறு இடத்தில் நிலத்தைத் தோண்டியபோது, அங்கேயும் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து நான்கு இடங்களில், தோண்டிய இடங்களில் எல்லாம், மனித எலும்புகள் காணப்பட்டதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட காவல்துறையினர், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இதுபற்றி கேள்வியுற்ற இலங்கை எம்.பி.க்கள் சிறிதரன், மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றனர்.
 
கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, பலர் காணாமல் போயிருந்ததாகவும், அவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் இந்த புதைகுழிகளுக்கும் தொடர்பிருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.