யாருடைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டோம்: கிரீஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு

Alexis Tsipras
Suresh| Last Updated: வியாழன், 9 ஜூலை 2015 (13:50 IST)
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டின் பிரதமர், நாம் யாருடைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் யூரோ நாணயத்தை பயன்படுத்துவதில் இருந்து வெளியேறுவதற்கும் தயாராக இருக்கிறோம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாடு பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் பல லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

இந்நிலையில், கடன் கொடுத்த நாடுகள் கிரீஸ் நாட்டில் சிக்கன நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி சில நிபந்தனைகளை விதித்தன.
இந்த நிபந்தனை குறித்து பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரீஸ் நாடு வெளியேறவும் தயாராக உள்ளது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலெக்சிஸ் டிசிபிராஸ் உரை நிகழ்த்தினார்.
அப்போது அலெக்சிஸ் டிசிபிராஸ் பேசியதாவது:–

நாடு தற்போது சிக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நிச்சயமாக மீண்டு விடும். அதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரமாக எடுத்து வருகிறோம்.

யாருடைய நிபந்தனைகளுக்கும் நாம் அடிபணிய தேவையில்லை. தேவைப்பட்டால் யூரோ நாணயத்தை பயன்படுத்துவதில் இருந்து வெளியேறுவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
நாட்டில் பல மறுசீரமைப்புகள் செய்வதன் மூலம் நிச்சயம் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம். இதற்காக சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்படும். நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
நமக்கு தேவையான அளவிற்கு எல்லாமே இருப்பில் உள்ளது. மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அலெக்சிஸ் டிசிபிராஸ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :