பாலியல் மின் புத்தகங்கள் வாங்க ஜெர்மனியில் புதிய நேரக்கட்டுப்பாடு

பாலியல் மின் புத்தகங்கள் வாங்க ஜெர்மனியில் புதிய நேரக்கட்டுப்பாடு
Last Modified சனி, 27 ஜூன் 2015 (20:31 IST)
பாலியல் கிளர்ச்சியூட்டும் மின் புத்தகங்களை வாங்க விரும்பும் ஜெர்மனியர்கள், அந்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்கும் விடியற்காலை 6 மணிக்கும் இடைப்பட்ட நேரங்களில் மட்டுமே அவற்றை இனிமேல் வாங்க முடியும்.

இத்தகைய நேரக்கட்டுப்பாட்டு விதிகள் 2002 ஆண்டு முதலே ஜெர்மனியில் இருக்கும் வயது வந்தவர்களுக்கான பாலியல் படங்களை காண்பிக்கும் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறத. அந்த நேரக்கட்டுப்பாடு தற்போது இணையத்தில் கிடைக்கும் பாலியல் கிளர்ச்சியூட்டும் மின் புத்தகங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான பாலியல் மின் புத்தகமான Schlauchgeluste என்கிற தலைப்பிலான மின் புத்தகம், சிறுவர்களுக்கு மிக இலகுவாக கிடைப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஜெர்மனியில் இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இளைஞர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம் முட்டாள்தனமானது என, புத்தக தொழில்துறை குறித்து எழுதும் வலைப்பூ எழுத்தாளர் ஒருவர் விமர்சித்திருக்கிறார்.

அதேசமயம் இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக, ஜெர்மன் பிரசுரிப்பாளர்கள், மற்றும் புத்தக விற்பனையாளர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெர்மன் சட்டத்தின்படி, இளைஞர்கள் மத்தியில் பாலியல் கிளர்ச்சியை ஊட்டி, ஆபத்து விளைவிக்க கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் தனிமைப்படுத்தி, பொதுவான புத்தக விற்பனைப்பட்டியலில் இருந்து நீக்கி மறைத்து வைக்கப் போவதாகவும், இதற்கான பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தி இத்தகைய புத்தகங்களை பகல் நேரத்தில் கண்ணில் படாமல் வைக்கப் போவதாகவும், அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கிளர்ச்சியூட்டும் மின் புத்தகங்களை வாங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நேரக்கட்டுப்பாட்டு விதிமுறையானது, அவ்வளவு ஆக்கபூர்வமான செயலாக கருத முடியாது என தெரிவித்த ஜெர்மன் பிரசுரிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் சட்டப் பிரிவின் உறுப்பினர் ஜெசிக்கா சாஞ்சர், சிறுவர்களால் அதற்கான மாற்று வழிகளை எளிதில் கண்டு பிடிக்க முடியும் என கூறினார்.

அதற்கு பதிலாக வயது வந்தவர்களுக்கான மின் புத்தகங்களை இணையத்தில் வாங்கும் போது, வாங்குபவர் குறிப்பிட வயதைக்கடந்தவராக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையானதொரு வழியே சரியான மாற்று என்றும் அவர் தெரிவித்தார். அப்படியானதொரு தடையை தாண்டுவது சிறார்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மன் அரசின் புதிய விதிமுறைகளை கடைபிடிக்காத புத்தக விற்பனையாளர்களுக்கு, 50,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :