வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2016 (13:35 IST)

மூன்றில் இரண்டு பேருக்கு தண்ணீர் இல்லை! - ஆய்வில் அதிர்ச்சி

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் கடுமையான நெருக்கடி இருப்பதாக புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
நெதர்லாந்து நாட்டின் டுவெண்டீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு அந்நாட்டின் அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகியுள்ளது. தாங்கள் கணித்ததைவிட அதிகமான அளவில் நெருக்கடி உருவாகியுள்ளது என்று கூறும் அந்த விஞ்ஞானிகள், ஒரு ஆண்டில் குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் 400 கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
 
இவர்களில் சுமார் பாதிப்பேர் இந்தியாவிலும், சீனாவிலும் உள்ளனர் என்பது அந்த ஆய்வறிக்கையில் தரப்பட்டுள்ளது. கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் பகுதிகள் என்று இந்த அறிக்கை பல்வேறு பகுதிகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த ஆண்டில் கிடைக்கும் தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு அளவில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.
 
அதனால், நிலத்தடி நீரை அபரிமிதமாகப் பயன்படுத்தும் கட்டாயம் அவர்கள் மீது விழுகிறது. பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரே இல்லாமல் போயிருப்பதும் விஞ்ஞானிகளால் சுட்டிக்காட்டப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் தண்ணீர் பயன்பாட்டு அளவு அதிகரிப்பு இருக்கும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
 
குறைவான தண்ணீரில் குளித்துக் கொள்வது தீர்வல்ல என்கிறார் ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அர்ஜென் ஹோக்ஸ்ட்ரா கூறுகிறார். உணவுப் பழக்க வழக்கங்களில் கூட பெரும் மாற்றம் வராமல் தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.
 
பயிர்கள் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றிற்கு பெரும் அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ கறியைத் தயார் செய்வதற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீரைச் செலவழிக்கிறோம். ஆடு, மாடுகளை வளர்ப்பதற்கு நிறையத் தண்ணீரைச் செலவிடுகிறோம். அவற்றை வெட்டி, உணவாக்கிக் கொள்ளவே வளர்க்கிறோம் என்கிறார் அவர்.
 
பாகிஸ்தான், ஈரான், மெக்சிகோ மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வற்றிப் போய்விட்டது. ஏமன் நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரே இல்லாத நிலைமை தோன்றிவிடும். தண்ணீரை புத்திசாலித்தனமாகக் கையாளும் உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்று அர்ஜென் ஹோக்ஸ்ட்ரா வலியுறுத்துகிறார்.