ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுங்கள்: வைகோ வேண்டுகோள்


K.N.Vadivel| Last Modified வியாழன், 19 நவம்பர் 2015 (23:56 IST)
ஈழத்தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் இருப்பதால், சர்வதேச விசாரணைக்கு உலகத்தமிழர்கள் போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளச் சென்ற ஐநா விசாரணைக் குழு தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், 2010 ஆம் ஆண்டிற்கு பின்பு, ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
 
சுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கை ரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்த அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேசவிசாரணையும், நீதி விசாரணையுமே  உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என நான் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். ஆனால், இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்தியா செயல்பட்டது. அது இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
 
உலகெங்கும் வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க அந்தந்த நாடுகளில் அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :