வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (17:57 IST)

குற்றவாளியின் கைபேசியை திறக்க மறுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக், டிவிட்டர் ஆதரவு

அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைபேசியை திறக்க மறுப்புத் தெரிவித்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

 
அமெரிக்காவின் சான் பேர்னாடினோ நகரில் சயிட் ரிஸ்வான் ஃபாருக் மற்றும் அவரது மனைவி ஆகியோர், டிசம்பரில் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
 
அவரது கைப்பேசியை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அவரது கைப்பேசி ரகசிய குறியீடு மூலம் பூட்டப்பட்டுள்ளது. பிழையான இரகசியக் குறியீட்டை 10 தடவைகள் பயன்படுத்தி முயற்சித்தால், அந்த கைத்தொலைபேசியில் உள்ள தரவுகள் அழிந்துபோய்விடும்.
 
இதனால், கலிஃபோர்னியா நீதிமன்றம் அந்த கைப்பேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு உத்தரவு விடுத்தது.
 
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், ”அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுக்கும்.
 
அத்துடன், தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்த உத்தரவை ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிருவனத்தினர் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து கூறியுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தினர், ”நாங்கள் தீவிரவாதத்தை கண்டிக்கிறோம். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது முழு ஆதரவையும் அழிக்கிறோம். தீவரவாதத்தை பாராட்டவோ, ஊக்குவிக்கவோ எங்களது சேவையில் இடமில்லை.
 
ஆனால், எங்களது நிறுவனத்தின் பாதுகாப்பு தன்மையை வலுவிழக்கச் செய்வதற்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.
 
ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜாக் டோர்சே, “நாங்கள் டிம் குக் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 
கூகுள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ’அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தின் கோரிக்கையானது வாடிக்கையாளர்களின் தரவுகள் முடக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்’ என்றும் தெரிவித்துள்ளார்.