வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (17:28 IST)

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு தினமும் 2 பேர் பலி

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரையில் 385 பேர் காவல் துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர்.
 

 
கடந்த பத்தாண்டுகளில் சுடப்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்று அமெரிக்க காவல்துறை அளித்திருக்கும் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயிரிழந்திருப்பார்கள் என்று காவல்துறை மையம் என்கிற அரசு சாரா நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
 
மேலும், “காவல்துறையின் துப்பாக்கிச்சூடுகள் சரியான எண்ணிக்கையில் கணக்கில் வருவதில்லை. இவற்றை சரியான முறையில் கணக்கில் வைக்க வேண்டிய சமூகத் தேவை உள்ளது. ஆனால் அதை செய்வதற்கான அரசியல் உறுதி இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டில் கருப்பின மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகின. குறிப்பாக, 2012 ஆம் ஆண்டில் ஓஹியோ மாகாணத்தின் கிளெவ்லேண்ட் பகுதியில் கருப்பர் ஒருவரைச் சுட்டுத் தள்ளிய காவல்துறை அதிகாரி சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
 
இரண்டு கருப்பர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது 13 காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். அந்த இரு கருப்பர்கள் எந்தவிதமான ஆயுதங்களையும் வைத்திருக்கவில்லை.
 
ஆனால் நீதிமன்றத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குத் தலைமை தாங்கிய காவல்துறை அதிகாரி மைக்கேல் பிரெலோவுக்கு விடுதலை கிடைத்தது. இதனால், நீதிமன்றங்களும் நிற வேற்றுமையைக் கடைப்பிடிக்கின்றன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
தனது வழக்கறிஞரைக் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களை மைக்கேல் பிரெலோ தெரிவித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்ற வாசலில் அந்த இரண்டு கருப்பின இளைஞர்களின் குடும்பத்தினர் நீதி கிடைக்காததால் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். இத்தகைய காட்சிகள் வாடிக்கையானதாகி விட்டன என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.