1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2015 (12:19 IST)

இஸ்லாமியக் குழுவின் சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்க புதிய போலீஸ் குழு

இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய சமூக வலைத்தள கணக்குகளைக் கண்டறிந்து, அதனை முடக்குவதற்கு ஐரோப்பியக் காவல்துறையான யூரோபோல் புதிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

பதின்மவயதினரை ஈர்க்க, ஐஎஸ் பயங்கரவாதக் குழு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தீவிரமாகப் பயன்படுத்திவருகிறது.

சுமார் ஒரு லட்சம் டுவிட்டர் குறுந்தகவல்கள் ஒவ்வொரு நாளும் பரப்பப்படுகின்றன என்பதால், இவற்றைக் கண்காணித்து அகற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

இதன் காரணமாக, இதற்கென புதிய சிறப்புக் குழு ஒன்றை யூரோபோல் அமைத்துள்ளது.

யூரோபோல், இனி சமூக வலைத்தள நிறுவனங்களுடன் இணைந்து, அந்தக் கணக்குகளைக் கண்டறியும். எந்தெந்த நிறுவனங்களுடன் இணைந்து யூரோபோல் செயல்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

புதிய கணக்குகள் துவங்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திலேயே மூடப்படுவதை இந்த போலீஸ் குழு இலக்காக வைத்துள்ளது.

ஜூலை ஒன்றாம்தேதியன்று இந்தக் குழு தனது பணியைத் துவங்கவிருக்கிறது. ஆனால், ஐஎஸ்ஸுடன் தொடர்புடைய வலைத்தள கணக்குகளைக் கண்டறிந்து முடக்குவது என்பது மிகப் பெரிய பணி என யூரோபோலின் இயக்குனர் ராப் வெய்ன்ரைட் தெரிவித்திருக்கிறார்.

90,000 ட்விட்டர் கணக்குகள்

சமூக வலைத்தள கணக்குகளை நேரடியாக கவனிப்பது, தங்களுக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்கள், ஐரோப்பாவின் பிற காவல்துறை அளிக்கும் தகவல்கள் ஆகியவற்றை வைத்து, முக்கியமான ட்விட்டர் கணக்குகளை முடக்க முடியும் யூரோபோல் நம்புகிறது.

வாஷிங்டனில் இருக்கும் ப்ரூக்ளின் இன்ஸ்டிடியூஷன் சமர்ப்பித்திருக்கும் ஒரு அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 90,000 ட்விட்டர் கணக்குகள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இந்த டிவிட்டர் கணக்குகளின் மூலம் ஐஎஸ்ஸில் சேர வாய்ப்புள்ளவர்கள் ஈர்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் இதன் மூலம் ஐஎஸ்ஸில் சேர்க்கப்படுவதில்லை.

ஐஎஸ்ஸில் சேர்ப்பதற்கான உரையாடல்கள் ஸ்கைப், வாட்ஸ் அப், கிக் போன்றவற்றின் மூலம்தான் நடக்கின்றன.

பிரிட்டன், ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட் உள்பட ஐரோப்பாவைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டவர்கள் ஐஎஸ்ஸால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளுக்குச் சென்றிருப்பதாக யூரோபோல் கருதுகிறது.