துபாய் விமான நிலையத்தை திடீரென தாக்கிய ட்ரோன்.. விமானங்கள் கேன்சல்.. பயணிகள் அவதி..!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இன்று திடீரென துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்கியதால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் உடனடியாக செயல்பட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் காரணமாகச் சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. ஈரானுக்கும் இஸ்ரேல் - அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.
வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்து நிறுத்தினாலும், இது போன்ற சம்பவங்கள் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. பயணிகள் தங்களின் விமான பயணம் குறித்த விவரங்களை அறிய அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Edited by Siva