வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (09:57 IST)

ரசாயனம் அதிகம் உள்ள சோப்பு, பற்பசை முதலியவை மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் - அதிர்ச்சி தகவல்!

அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
 
இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
நாளமில்லா சுரபிகளை பாதிப்பவை என்று கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் ‘நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பவை’ எனக் கருதப்படும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து, நவீன ஐரோப்பா கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் போராசிரியர் திமோ ஸ்ட்ரன்கெர் கூறுகையில், ‘சிலவகை சோப்புகள், பற்பசைகள், கிரீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் சிலவகை ரசாயனங்கள், விந்தணுக்களில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகப்படுத்துகின்றன. அவற்றின் நீந்தும் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன” என்னும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.