8000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் உலகப்புகழ் பெற்ற BMW கார் நிறுவனம்.. என்ன காரணம்?
உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
மின்சார வாகன தயாரிப்புக்கான தாங்க முடியாத செலவுகள், சீன நிறுவனங்களிடமிருந்து எழும் கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜெர்மனியின் வாகனத்துறை தற்போது வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பிஎம்டபுள்யூவும் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் உலக அளவில் சுமார் 1.5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுகளை இலக்காக கொண்டு இந்த வேலைநீக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், உற்பத்தி பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். தங்களது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட தயாராகி வரும் வேளையில் இந்நிறுவனம் அறிவித்துள்ள இந்த அதிரடி பணிநீக்க முடிவு, உலகளாவிய வாகன சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
