இன்று வங்கதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்: ஷேக் ஹசீனாவுக்கு பிந்தைய புதிய அரசியல் விடியல்!
வங்கதேசத்தில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொதுத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
2024 ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் புரட்சிக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால் உலகமே இதனை உற்றுநோக்குகிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியின் கீழ் இத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் சுமார் 12.77 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தகுதியுடையவர்கள். இதில் 45.7 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வெள்ளை நிற வாக்குச்சீட்டுடன், அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் குறித்த 'ஜூலை சாசனம்' மீதான பொது வாக்கெடுப்பிற்காக இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தாரிக் ரகுமான் தலைமையிலான பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Edited by Siva