வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 21 மே 2015 (20:53 IST)

அமெரிக்க ராணுவ கண்காணிப்பு விமானத்தை விரட்டியடித்த சீனா

சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை, சீன கடற்படை விரட்டி அடித்து, எச்சரிக்கை விடுத்து உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தெற்கு சீன கடற்பகுதியில் அமெரிக்க கண்காணிப்பு விமானமானது சுமார் 8 முறை நுழைய முயன்றது என்றும், சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் கடற்படை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானமானது, சர்வதேச பகுதிக்கு சென்றுவிட்டது. “இது சீனாவின் கடற்பகுதியாகும், நீங்கள் செல்லுங்கள்” என்று எரிச்சலுடன் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பி8-ஏ பொசிடான் கண்காணிப்பு விமானம் மிகவும் நவீனமானது. 15,000 அடி என்பதே இதனது மிகவும் தாழ்வாக பறக்கும் தகுதியாகும். 
 
தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படை விமானத்தை சீனா எச்சரிக்கை விடுத்து அனுப்பியதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ராணுவ விமானமும் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பிரச்சனையை எழுப்பும் என்று கூறப்படுகிறது. சீனாவின் அதிநவீன ராணுவ வளர்ச்சியானது, அமெரிக்காவிற்கு சற்று எச்சரிக்கையையே ஏற்படுத்தி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் விரட்டியடிக்கப்பட்டது, அமெரிக்காவிற்கு தற்போது சற்று ஆத்திரத்தையே ஏற்பத்தி இருக்ககூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சிஐஏயின் துணை இயக்குநர் மைக்கேல் மோரல் பேசுகையில், சீனாவின் போக்கு தொடர்ந்து இதேபோன்று நீடித்தால், அமெரிக்கா - சீனாவுக்கு இடையே நேரடியாக போர் மூளும் சூழ்நிலை விரைவில் உருவாகும். என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார் என்று சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.