ஏர் ஆசியா விமானத்தின் என்ஜினில் பனிக்கட்டி உறைந்ததால் விபத்தா?

லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 5 ஜனவரி 2015 (17:36 IST)
விபத்திற்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் என்ஜினில் பனிக்கட்டி உருவாகி செயலிழந்திருக்கலாம் என்று இந்தோனேஷியா வானிலை ஆய்வு மைய இணையத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நகருக்கு இன்று காலை 155 பயணிகள் மற்றும் 6 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவுடன் ஏர் ஏசியா விமானம் (எண் QZ8501) புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்டு 42 நிமிடங்களில் கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானது. தகவல் பறிமாற்றம் துண்டிக்கப்பட்டதாவும், விமானம் வழக்கமான ஒடு பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பின்னர் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து உள்ளது தெரிய வந்தது. ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விபத்தில் பலியானவர்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதறிய பாகங்களும், உயிரிழந்தவர்களின் உடல்களும் கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்குப் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், அந்தப் பகுதியில் நவீன தேடுதல் கருவிகளின் உதவியுடன் விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய செய்தி ஒன்றை இந்தோனேஷிய வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தன்று விமானம் பறந்த பகுதியில் புயல் மற்றும் கன மழையும் பெய்துள்ளது. கடும் குளிர்காற்றும் வீசியுள்ளது. இதன் காரணமாக விமானத்தின் என்ஜினில் பனிக்கட்டி உருவாகி செயல்பாடு இழந்திருக்கலாம் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் விமானம் பறந்த அந்தப் பகுதியில், தட்பவெட்ப நிலை மைனஸ் 80 முதல் 85 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது. இந்த காரணமாகவும் என்ஜின் உறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :