வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 5 ஜூலை 2014 (19:35 IST)

செவிலியர்களுக்கு ISIS போராளிகள் எந்த தொந்தரவும் கொடுக்க வில்லை: வெளியுறவுத் துறை அதிகாரி

மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களுக்கு, ISIS போராளிகள் எந்த தொந்தரவும் கொடுக்க வில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீது அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீது அக்பரூதீன் செய்தியர்ளர்களிடம் கூறியதாவது:–

"ஈராக்கில் 46 இந்திய செவிலியர்கள் திக்ரித் நகரில் சிக்கி கொண்ட தகவல் கிடைத்த நாள் முதலே, நாங்கள் அவர்கள் பற்றி கண்காணித்துக் கொண்டிருந்தோம்.

தீவிரவாதிகள் அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க வில்லை. கூடுதல் பணம் தருகிறோம் என்று கூறி அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்திருந்தனர்.

திக்ரித் நகரில் இருந்து 46 பேரையும் மொசூல் நகருக்கு தீவிரவாதிகள் அழைத்து செல்ல திட்டமிட்ட போது, அதை செவிலியர்கள் விரும்பவில்லை. தீவிரவாதிகளுடன் செல்ல அவர்கள் பயந்தனர்.

இதையடுத்து நாங்கள் ஈராக்கில் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவியுடன் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேசினோம். என்றாலும் 46 செவிலியர்களையும் தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக மொசூல் நகருக்கு அழைத்து சென்றனர்.
அப்போது நாங்கள் செவிலியர்களுடன் தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தோம். தீவிரவாதிகள் சொல்வது போல மொசூல் செல்லுங்கள். உங்களை அங்கிருந்து மீட்க ஏற்பாடு செய்கிறோம் என்று உற்சாகப்படுத்தினோம். ஆனால் செவிலியர்கள் பயந்தபடியே சென்றனர்.

இதற்கிடையே நாங்கள் பல்வேறு கோணங்களில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினோம். ஈராக் நாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள் மூலமாகவும் வெளியில் இருப்பவர்கள் மூலமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

செவிலியர்களை விடுவிக்க மிக நீண்ட போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. பல இடங்களில் கதவுகளை தட்டினோம். அதிர்ஷ்டவசமாக ஒரு கதவு திறந்து கொண்டது.

இதன் மூலம் 46 செவிலியர்களும் மீட்கப்பட்டன. மற்ற படி இந்த மீட்பு நடவடிக்கை எப்படி, யார், யார் உதவியுடன் நடந்தது என்ற தகவல்களை வெளியிட இயலாது." என்று அவர் தெரிவித்தார்.

ISIS போராளிகள் பிடியிலிருந்த செவிலியர்கள் அனைவரும் பத்திரமாக நாடுதிரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.