ஹூ ஜிண்டாவ் உடன் மன்மோகன் சிங் சந்திப்பு!

Webdunia| Last Modified சனி, 25 அக்டோபர் 2008 (18:23 IST)
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜிண்டாவ்-ஐ சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.

பீஜிங்கில் இன்று நடந்த இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை பீஜிங் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு நடைபெற்ற ஏழாவது ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற-இறக்க நிலை, எரிசக்தி பாதுகாப்பு, தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அதிபருமான ஹூ ஜிண்டாவை பிரதமர் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற போது இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

எல்லைப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஒரே நாள் இரவில் தீர்த்து விடக்கூடியதல்ல என்று வெளியுறவு செயலாளர் சிவ சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் டாரா அஸோவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :