பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை திடீர் தீர்மானம்: இலங்கைக்கு நெருக்கடி

நியூயார்க்| Webdunia|
போர் நடைபெறும் இடங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக நிறைவேற்றி உள்ளது.

ஏற்கனவே போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கு ஐ.நா.வின் இந்தத் தீர்மானம் மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐ.நா. பொதுச் செயலாளர் நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபைத் தீர்மானம் கோருகின்றது.
அந்தப் பிரதிநி, மோதல் பிரதேசங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பவராகவும் தலைமையேற்று நடத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை வழங்குவதுடன்,அவர்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவியை அமெரிக்கா வகிக்கும் இறுதி நாளான நேற்று, அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சபைக்குத் தலைமை தாங்கினார்.அப்போது இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கு உரையாற்றிய கிளின்டன், கொங்கோ குடியரசில் ஒவ்வொரு மாதமும் 1,100-க்கும் அதிகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்டார்.கடந்த ஜூலையில் அந்த நாட்டுக்குத் தான் மேற்கொண்ட பயனத்தின் போது அவர்களில் சிலரைச் சந்தித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
"வன்புனர்வால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும், அவர்களது உறவினர்களிடமும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஏற்படும் பாதிப்பை மதிப்பிட முடியாது.மனிதத் தன்மையற்ற பாலியல் வன்முறைகள் வெறுமனே ஒரு தனிநபரையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு கிராமத்தையோ, ஒரு குழுவையோ மட்டும் பாதிக்கவில்லை.மனிதர்கள் ஆகிய எங்கள் எல்லோருக்குமே அதன் தாக்கம் பரவுகின்றது.
அது குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பாதகமானது.அரசியல் சமூக உறுதித் தன்மையைப் படிப்படியாக அழித்துவிடும். பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும்.நாம் அனைவரும் இதன் பின்னால் (தீர்மானத்தின் பின்) ஆதரவளித்து நிற்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் கிளின்ட்ன்.

சிறிலங்கா, பர்மா போன்ற ஆசிய நாடுகளிலும் பால்கன் நாடுகளிலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், போரின் போது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்காவின் குரல் வானொலி (Voice of America) கூறுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது கடந்த 30 ஆண்டுகளில் சிறிலங்கா மற்றும் இந்தியப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய பெரும்பாலான குற்றச் செயல்கள் சமூகத் தகுதிநிலை காரணமாக வெளியே சொல்லப்படுவது இல்லை எனினும், செம்மணி கிரிசாந்தி படுகொலை வழக்கு மற்றும் மட்டக்களப்பு கோணேஸ்வரி வழக்கு போன்றவற்றில் தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வன்னியில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் மீதும் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் தொடர்ச்சியாகப் படையினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :