பாக்.: அமெரிக்க தூதரக அதிகாரியின் வழக்கு மார்ச் 14 க்கு ஒத்திவைப்பு

லாகூர் | Webdunia| Last Modified வியாழன், 17 பிப்ரவரி 2011 (14:08 IST)
பாகிஸ்தானில் இரண்டு பேரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் மீதான வழக்கை வருகிற மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் என்பவர், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கினர்.இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரேமண்ட் டேவிஸை கைது செய்தனர்.நீதிமன்றம் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டதால் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ரேமண்ட் டேவிஸ் தூதரக அதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிய அமெரிக்கா,அவரை விடுதலை செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை தொடர்ந்து வலியுறுத்தியும்,எச்சரிக்கை விடுத்தும் வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் தொடர் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ரேமண்ட் டேவிஸை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், ரேமண்ட் டேவிஸ் தூதரக அதிகாரி என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் கால அவகாசம் கோரியதால், இவ்வழக்கை வருகிற மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.


இதில் மேலும் படிக்கவும் :