திசநாயகத்திற்கு சர்வதேச விருது!

Webdunia|
இனப் பிளவை ஏற்படுத்தும் வகையில் எழுதியதாகக் கூறி சிறிலங்க உயர் நீதிமன்றத்தால் 20 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஜெ.எஸ். திசநாயகத்திற்கு துணிவான, நேர்மையான ஊடகவியலிற்கான பீட்டர் மாக்லர் விருது அளிக்கப்பட்டுள்ளது!

பிரான்சில் இருந்து இயங்கும் ஏ.எஃப்.பி. (Agence France-Presse) நிறுவனத்தில் 30 ஆண்டுக்காலம் பணி புரிந்து மறைந்த பத்திரிக்கையாளர் பீட்டர் மாக்லர் பெயரிலான இவ்விருதை எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters without Borders) அமைப்பின் அமெரிக்கக் கிளையும், கிளோபல் மீடியா போரம் என்ற அமைப்பும் இணைந்து ஜெ.எஸ். திசநாயகத்திற்கு வழங்கியுள்ளன.
ஊடகங்களின் மீது கடும் ஒடுக்குமுறை நிலவும் நாட்டில் துணிச்சலாக பணிபுரியும் ஊடகவியலாளர்களில் சிறப்பாகவும், துணிந்தும் பணியாற்றுபவர்களுக்கே இவ்விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“உண்மையை வெளிக்கொணருவதில் சிரத்தையுள்ள பத்திரிக்கையாளர்கள் அந்நாட்டிற்கு (சிறிலங்கா) தேவை, அப்படிப்பட்டவர் ஜெ.எஸ். திசநாயகம். அவருக்கு 2009ஆம் ஆண்டிற்கான இவ்விருதை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று விருதை அறிவித்த எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் தலைமைப் பொதுச் செயலாளர் ஜான் பிரான்காய்ஸ் ஜூலியார்ட் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி கூறியுள்ளது.
“இலங்கை மக்களுக்கு தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகைத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் சிறிலங்கா என்றைக்கும் அமைதி என்பதை அறிய முடியாத நாடாகிவிடும்” என்று ஜூலியார்ட் விருது அறிக்கையில் கூறியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.
திசநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகக் கடுமையானது எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு என்று கூறியுள்ளது.

“சிறிலங்க நீதிபதிகள் சிலர் பழிவாங்குதலை நீதி என்று நினைத்து குழம்பியுள்ளார்கள் போலும். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியச் சட்டத்தை பத்திரிக்கையாளர்களுக்கும், மனித உரிமையாளர்களுக்கும் எதிராக பயன்படுத்தி, வலியை கொடுத்துப் பெற்ற வாக்குமூலத்தையும், தவறான தகவல்களையும் அடிப்படையாக்கி நடந்த வழக்கில் சிறிலங்க நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அந்நாட்டு நீதிபதிகள் சிலர் பழிவாஙகலை நீதி என்று நினைத்து குழம்பியுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது” என்று ஜூலியார்ட் கூறியுள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் தேச பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெறவுள்ள விழாவில் திசநாயகத்திற்கு இவ்விருது வழங்கப்படும். அந்நிகழ்ச்சியில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் ஆசிரியர் மார்க்கஸ் பிரெளச்லி சிறப்புரை நிகழ்த்துகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :