ஐஎஸ்ஐ-க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு: சிஐஏ குற்றச்சாட்டு!

Webdunia| Last Modified வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:58 IST)
பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புலனாய்வுக் கழகமான சிஐஏ (CIA), இதுதொடர்பான விவர அறிக்கையை பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம், சிஐஏ தலைவர் மைக்கேல் வி.ஹைடன் அறிக்கையை நேரடியாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள சில குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் உள்ளதால், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளால் அதனை மறுக்க முடியாது என சிஐஏ உயரதிகாரி கூறியதாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த புதனன்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஐஎஸ்ஐ அமைப்பின் மீது கூறப்பட்டிருந்த பெரும்பாலான குற்றச்சாட்டுகள், சிஐஏ அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற கிலானியுடன், ஜூலை 28ஆம் தேதி சிஐஏ தலைவர் மைக்கேல் இரவு உணவு அருந்தினார். அப்போது தீவிரவாதிகளுக்கு தகவல்களை அளிக்கும் ஐஎஸ்ஐ அதிகாரிகள் மீது கிலானி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைக்கேல் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அதே தினத்தன்று கிலானி, அதிபர் புஷ்ஷை சந்தித்த போது அவரும் இதே கருத்தை வலியுறுத்தியதுடன், ஐஎஸ்ஐ அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால், உளவுத் தகவல்களை பாகிஸ்தானுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கிலானியிடம் புஷ் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :