உச்ச நீதிமன்றத்துக்கு பணிந்தார் பாக். பிரதமர் - சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஒப்புதல்
Webdunia|
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் இன்று அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது. பின்னர் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் பொறுப்பு ஏற்றவுடன் அதிபர் சர்தாரி மீது ஊழல் வழக்கு விசாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அஷ்ரப் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டதை அடுத்து அவர் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதி மன்றத்தில் ஆஜரான அஷ்ரப் , சர்தாரி மீதான வழக்கை தொடர கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் மூன்று வார அவகாசத்திற்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் , தன்னுடைய அரசிற்கு அதிபர் சர்தாரி மீதான வழக்கை விசாரிப்பதற்கு தடை ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, பிரதமர் அஷ்ரப் நீதிமன்றத்தில் இனி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான வெளிநாட்டு வங்கி இருப்புகளின் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.