ஈழத் தமிழர் தலைவர்கள் அமெரிக்க அரசு பிரதிநிதிகளுடன் சந்திப்பு

Webdunia| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2011 (17:59 IST)
இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக உள்ள தமிழ்த் தேசக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க அயலுறவு அமைச்சக பிரதிநிதிகள் மூன்று நாட்களாக தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர்.

தமிழ்த் தேச கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, பிரேமச் சந்திரன், சுமந்திரன் ஆகியோர் வாஷிங்கடனில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்துவரும் இந்த பேச்சுவார்த்தை சிறிலங்க அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒரே சந்திப்பில் தலைவர்களோடு விடயங்களை விலாவாரியாகப் பேசித் தீர்த்துவிடும் அமெரிக்க அயலுறவு அமைச்சக அதிகாரிகள், தமிழர் தலைவர்களோடு தொடர்ந்து மூன்று நாட்கள் பேசி வருகிறார்கள் என்றால், இந்தப் பேச்சு மிகுந்த முக்கியத்துவமானதாகவே கருதப்படும் என்று சிறிலங்க அரசு உணர்ந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிடப்போவதாக தமிழ்த் தேச கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் கனடா நாட்டிற்கு வந்து அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 31ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

அதன் பிறகு மீண்டும் அமெரிக்கா செல்லும் தமிழர் தலைவர்கள், அங்கு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனை சந்தித்துப் பேசுகின்றனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கையும் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :