இந்திய கண்காணிப்பு ஒப்பந்த வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை ஒப்புதல்!

Webdunia|
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கென்று உருவாக்கப்பட்ட கண்காணிப்பு ஒப்பந்த (Safeguards Agreement) வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமையின்(IAEA) ஆளுநர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

வியன்னாவில் உள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைமையகத்தில் இன்று நடந்த கூட்டத்தில் அதன் ஆளுநர்கள் 35 பேரும் கலந்துகொண்டதாகவும், அதில், “சமூக பயன்பாட்டிற்கான அணு மின் நிலையங்களை பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம” பரிசீலிக்கப்பட்டதாகவும், அதனை ஆளுநர்கள் குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாகவுமகூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் மொஹம்மது எல் பாரடீ கூறியுள்ளார்.
22 பக்கங்கள் கொண்ட அந்த கண்காணிப்பு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு (2009) முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அதன்படி 2014ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒப்புக்கொண்டபடி அதன் 14 அணு மின் சக்தி உலைகளையும், அது தொடர்பான மற்ற மையங்களையும் பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் என்று எல் பராடீ கூறினார்.
1971 முதல் 1994ஆம் ஆண்டுவரை செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூடங்குளம் உட்பட இந்தியாவின் 6 அணு மின் சக்தி நிலையங்கள் பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. இவைகளோது மேலும் 14 அணு மின் உலைகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

இன்றைக்கு பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் குழு ஒப்புதல் அளித்த ஒப்பந்த வரைவு மட்டுமின்றி, நமது அணு மின் சக்தி உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான ஒரு கூடுதல் ஒப்பந்தம் (Additional Protocol) உருவாக்குவது தொடர்பாக இந்தியா பேசிவருவதாகவும் எல் பராடீ தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :