இந்தியாவின் ஒப்புதலைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கை: அமெரிக்கா!

Webdunia| Last Modified செவ்வாய், 22 ஜூலை 2008 (12:43 IST)
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விஷயத்தில் இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தை தொடரவேண்டுமா இல்லையா என்பதை இந்தியர்கள்தான் (நாடாளுமன்றம்) கூறவேண்டும் என்றும் அமெரிக்க அயலுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் கொன்சலோ கலிகோஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெறிவித்த அவர், இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் சிறப்பு வாய்ந்த முக்கிய திட்டம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பொறுத்தே அதனை அமெரிக்கா முன்னெடுத்துச் செல்லும் என்றும் கூறினார்.

இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே அணுசக்தி ஒப்பந்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துக் கூற முடியும் என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது கொன்சாலோ தெளிவுபடுத்தினார்.
அமெரிக்க அயலுறவுத் துறையின் தெற்கு, மேற்கு ஆசிய விவகாரங்களுக்கானத் துணைச் செயலர் ரிச்சர்ட் பெளச்சர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய போது, டெல்லியில் ஆட்சியில் இருக்கு அரசுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற புஷ் அரசு நடவடிக்கை எடுக்கும், அந்த அரசு மைனாரிட்டி அரசாக இருந்தாலும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் என்று கூறியிருந்த நிலையில், கொன்சாலோ இன்று அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளது அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :