இந்தியப் பெருங்கடல் பகுதியை பாதுகாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது:யு.எஸ்.

வாஷிங்டன் | Webdunia| Last Modified செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (17:36 IST)
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டுமல்லாது அதற்கும் மேற்பட்ட கடல் பகுதிகளில் பாதுகாப்பு அளிக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கான பாதுகாப்பு குறித்த மறு ஆய்வறிக்கையை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் மேற்கண்டவாறு இந்திய இராணுவத்தின் கடற்படைத் திறனை வெகுவாக புகழ்ந்துள்ள ராபர்ட் கேட்ஸ் உலக அரசியல், பொருளாதாரம், மற்றும் இராணுவ சக்தி போன்றவை இடம் மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சி சர்வதேச அமைப்பை தொடர்ந்து மாற்றியமைத்து வருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

அதே சமயம் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து மிக சக்தி வாய்ந்த நாடாக விளங்கும் என்றும், ஆனால் முக்கிய தோழமை நாடுகள் மற்றும் நேச நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரித்து அமைதியையும், பாதுகாப்பையும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார சக்தி, அரசியல் செல்வாக்கு மற்றும் கலாச்சார பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

அமைதிப்பணி, மனிதாபிமான உதவிகள், இயற்கை பேரிடர் நிவாரண உதவிகள் போன்றவற்றின் மூலம் இந்தியா தனது இராணுவ வல்லமையை உலக அளவில் ஏற்கனவே நிரூபித்துள்ளது.
இந்தியாவின் இராணுவ திறன் அதிகரித்துள்ளதால் ஒட்டு மொத்த ஆசியாவுக்கும் இந்தியப் பெருங்கடலில் மட்டுமல்லாது அதற்கும் மேலான பகுதிகளிலும் இந்தியாவால் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் ராபர்ட் கேட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :