வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (11:21 IST)

உலக சினிமா - பெர்ப்யூம் - தி ஸ்டோரி ஆஃப் ஏ மர்டரர்

ரன் லோலா ரன் திரைப்படத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர், டாம் டீக்வர். அவர் இயக்கிய படங்களில் இன்றளவும் அதிகம் பேசப்படுவது, 2006 -இல் வெளிவந்த, பெர்ப்யூம் - தி ஸ்டோரி ஆஃப் ஏ மர்டரர்.

 
இந்தப் படத்தின் கதை பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கிறது. அங்குள்ள சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருக்கும் பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தை மீன் கழிவுகளுடன் கழிவாக கிடக்கிறது. பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை தனது அபார நுகரும் சக்தியால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் அடையாளம் கண்டு கொள்கிறது.
 
குழந்தையை மீன் கழிவுகளில் வீசிய குழந்தையின் தாய், அந்த குற்றத்துக்காக தூக்கில் போடப்படுகிறாள். குழந்தை ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்கிறது. அந்த குழந்தைதான் இந்தப் படத்தின் நாயகன், சான் பாப்டிஸ் க்ருனி.
 
பாப்டிஸ் இந்த உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் நுகர்ந்தே கண்டுபிடிக்கிறான். தண்ணீருக்குள் இருக்கும் தவளை.. தவளை முட்டைகள்கூட அவனது நுகரும் சக்தியிலிருந்து தப்பிக்க முடியாது.
 
இளைமைப் பருவத்தை அடையும் பாப்டிஸ் பெண்களின் சரும மணத்தால் ஈர்க்கப்படுகிறான். பொருள்களின் நறுமணத்தை எப்படி பெர்ப்யூமாக மாற்றுவது என்பதை தெரிந்து கொள்ள பால்டினி என்கிற பெர்ப்யூமரிடம் வேலைக்கு சேர்கிறான்.
 
ஆனால், பூக்களின் நறுமணத்தை பெர்ப்யூமாக்கும் கலை அவனுக்கு போதுமானதாக இல்லை. பெண்களின் நறுமணத்தை பெர்ப்யூமாக்க அவன் தீர்மானிக்கிறான். அதற்காக கொலைகளை நிகழ்த்துகிறான். 13 பெண்களை கொன்று 13 வகையான சென்ட்களை தயாரிப்பவன் அவற்றை கலந்து அதிஉன்னதமான பெர்ப்யூமை உருவாக்குகிறான். ஆனால், அவன் செய்த கொலைகளுக்காக அவன் கைது செய்யப்படுகிறான்.
 
அவன் உருவாக்கிய அந்த அதிஉன்னதமான பெர்ப்யூம் மக்களின் காதல் உணர்வுகளை தூண்டிவிடுகிறது. அவனை தண்டிப்பதற்குப் பதில் மக்கள் அவனை வழிபட ஆரம்பிக்கிறார்கள். ஆனாலும், பாப்டிஸின் மனம் அமைதியடைவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவனது முடிவும் பரிதாபமாக இருக்கிறது.
 
ஜெர்மன் நாவலாசிரியர் பேட்ரிக் சுஸ்கிந்த் எழுதிய பெர்ப்யூம் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை டாம் டீக்வர் இயக்கினார். இன்றுவரை அவரது உன்னதமான படைப்பாக இது திகழ்கிறது.