1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
  4. IPL 2026 KKR vs GT: Allen-Raghuvanshi Power Kolkata to 29-Run Win with Explosive Batting

ஐபிஎல் 2026: குஜராத்தை துவம்சம் செய்த கொல்கத்தா; 29 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐபிஎல் 2026
ஐ.பி.எல். 2026 தொடரின் விறுவிறுப்பான 60-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு, தொடக்க வீரர் ரகானே 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த பின் ஆலன் மற்றும் ரகுவன்ஷி ஜோடி குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அதிரடியாக விளையாடிய பின் ஆலன் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 93 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து ரகுவன்ஷி 82 ரன்களும், கேமரூன் கிரீன் 52  ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
 
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் 57 ரன்களும், காயம் காரணமாக இடையில் வெளியேறி மீண்டும் வந்த சாய் சுதர்ஷன் 53 (28) ரன்களும் எடுத்து அரைசதம் கடந்தனர்.
 
முன்னணி வீரர்கள் சிறப்பாகப் போராடிய போதிலும், கொல்கத்தா அணியின் துல்லியமான பந்துவீச்சால் குஜராத் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கையை கிழித்து நாடகம் நடத்தியது யார் என்பதை நிரூபிப்போம்!.. ரவி மோகன் மாமியார் பேட்டி!..