அய்யநாதன்|
Last Updated:
திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:34 IST)
webdunia photo
WD
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் அரணாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருப்பினும் அழியாத இயற்கை எழிலுடன் திகழ்கிறது டாப் ஸ்லிப்.
தமிழ்நாட்டின் பசுமை மாவட்டமான கோவையில் தென்னஞ் சோலைகளுக்கு இடையே செல்லும் பாதையில் 30 கி.மீ. பயணித்து டாப் ஸ்லிப் மலை வனப் பகுதியின் அடிவாரத்தை அடையலாம். அங்குள்ள சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்குப் (குடிமக்கள் கவனிக்க) பின் மலைப் பாதையில் மேலேறத் துவங்கியதுமே பல வன விலங்குகளைக் காணலாம்.
சிங்க வால் குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி ஆகியன பாதைக்கு அருகிலேயே திரிவதைக் காணலாம். மலபார் அணில் என்றழைக்கப்படும் பெரிய வகை அணில் - இவர் ஒரு மரத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலுள்ள இன்னொரு மரத்திற்குத் தாவுவதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக மரக்கிளையில் வசதியாக படுத்து ஒய்வெடுக்கும் நிலையிலேயே இவரைக் காண முடியும்.
வாகனத்தை மிக மெதுவாக ஓட்டிச் செல்லுங்கள். நமது ந(ர)கர வாழ்க்கையில் சிட்டுக் குருவியைக் கூட தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் நமக்கு, வண்ண வண்ணமாய் பறந்து திரியும் பலவகைப் பறவைகள் (ஒன்றின் பெயரும் நமக்கு தெரியவில்லை) தரிசனம் தருவார்கள். வழிகாட்டுவதைப் போல நமக்கு முன்னே பறந்த செல்லும் குருவியைப் போன்ற பறவையின் வேகம் பிரமிப்பைத் தரும்.
ஒரு மணி நேர மலைப் பயணத்திற்குப் பிறகு (மீ்ண்டும் ஒரு சோதனை சாவடி, சோதனையைத் தாண்டி) டாப் ஸ்லிப்பைத் தொடுவோம். நம் கண் முன்னே விரியும் பரந்த பசுமைப் புல்வெளி. அந்தி சாயும் நேரத்தில் இங்கு கூட்டம் கூட்டமாக மான்களைக் காணலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் டாப் ஸ்லிப் வனப் பகுதி மிகவும் கவனமாக பராமரிக்கப்பட்டு செழிப்புடன் உள்ளது. ஞெகிழி (பிளாஸ்டிக்), ஸ்டீரியோ இசை ஆகியவற்றிற்குத் தடை செய்து விலங்கினங்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. பரந்த புல்வெளியுடன் துவங்கும் இந்த வனப் பகுதி இந்திரா காந்தி தேச உயிரி பரவல் பூங்காவின் (National Bio-diversity Park) ஒரு அங்கமாக உள்ளது.
webdunia photo
WD
இங்கிருந்து 5 கி.மீ. தூரம் வரை தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட வனப் பகுதியாகும். இந்த நீண்ட சாலையில் காலைப் பொழுதிலோ அல்லது மாலை 4 மணிக்குப் பிறகோ அமைதியாக நடந்த சென்றால் பல விலங்குகளைக் காணலாம். எக்காரணத்திற்காகவும் பாதையில் இருந்து இறங்கி வனப் பகுதிக்குள் செல்லாதீர்கள். சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் இங்கு மிக அதிகம்.